பதிவு செய்த நாள்
08
பிப்
2018
04:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உருக்குலைந்த, வீர வசந்தராய மண்டபத்தின் மேற்கூரை, பகுதி பகுதியாக கீழே விழுந்து வருகிறது. விபத்தால் உயிர் பலியை தவிர்க்க, மேற்கூரைகளில் இரும்பு கர்டர்கள் அமைத்து முட்டுக்கொடுக்கும் பணி நடக்கிறது.
தீ விபத்தில் வீர வசந்தராய மண்டபத்தில், 7.000 சதுர அடி இடிந்தது. உயர் மட்டக்குழு, தடயவியல் துறையினர் ஆய்வுக்கு பின், இடிபாடுகளை அப்புறப்படுத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீர வசந்தராய மண்டபத்தில் தொட்டி நந்தி சிலை உள்ளது. இதன் அருகே வலதுபுறம் பசுபதிநாதர் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, தீ விபத்தால் சிதிலமடைந்த மேற்கூரையின் இரண்டு கற்கள் இடிந்து விழுந்தன. ஆயிரம் கால் மண்டபம் அருகே மேற்கூரை, வீர வசந்தராய மண்டபம், சுவாமி சன்னதி - தொட்டி நந்தி சிலை பகுதியின் மேற்கூரை ஆகியவை விழாமல் தடுக்க, இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கும் பணியில், தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.தீ விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ளும் உயர் மட்டக்குழு உறுப்பினர்கள், வீர வசந்தராய மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் பகுதிகளை பார்வையிட வசதியாக, சிதிலமடைந்த மேற்கூரைகளில் முட்டுக்கொடுக்கும் பணியை, தீயணைப்பு குழுவினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.இப்பணி முழுமையாக நிறைவடைந்தால் மட்டுமே ஆய்வுக்குழுவினர் தடையின்றி ஆய்வு செய்ய இயலும். ஆய்வு அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய, ஆய்வுக்குழுவிற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஆய்வுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் முட்டுக்கொடுக்கும் பணியை, ஓரிரு நாளில் முடிக்க, துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.