பதிவு செய்த நாள்
27
டிச
2011
11:12
ஆண்டவரின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்பது இன்றைய சிந்தனை. ஒரு ஆட்டுக்கிடை இருக்கிறது. அதற்குள் வாசல் வழியாய் வராமல், வேறுவழியாய் வருகிறவனை திருடன் என்றும், கொள்ளைக்காரன் என்றும் புரிந்து கொண்டு ஆடுகள் கூட சத்தமிடுகின்றன. ஆனால், வாசல் வழியாய் வருபவனை தன் மேய்ப்பன் என நம்பி, அவன் பின்னால் செல்கின்றன. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லி அழைத்து, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான். இந்த ஆடுகளைப் போலவே, மக்களாகிய ஆடுகளின் மேய்ப்பராகவும், வழிநடத்துபவராகவும் இயேசு கிறிஸ்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும் போது,""நான் வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான். நானே நல்ல மேய்ப்பன். நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனல்லாதவனும், ஆடுகளுக்கு சொந்தக்காரனும் அல்லாத கூலியாள், ஓநாய் வருகிறதைக் கண்டு, ஆடுகளை விட்டு ஓடிப் போகிறான். அப்பொழுது ஓநாய் பீறி, அவைகளைச் சிதறடிக்கும் இந்த தொழுவத்தில் உள்ளவைகள் அல்லாமல், வேறு ஆடுகளும் எனக்குண்டு, அவைகளையும் நான் கொண்டு வர வேண்டும். அவைகள் என் சத்தத்துக்கு செவி கொடுக்கும். என் ஆடுகள் (மக்கள்) என் சத்தத்திற்கு செவி கொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன். அவைகள் எனக்கு பின் செல்கிறது, என்றார். ஆடுகள் மேய்ப்பனின் சத்தத்துக்கு கட்டுப்படுவது போல, மனிதர்களும் தனது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்கிறார். ""எனது போதனைகளை கடைபிடியுங்கள். கடவுளிடம் விசுவாசமாக இருங்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். நல்லதையே செய்யுங்கள், என்கிறார். புத்தாண்டில், நாம் ஆண்டவருக்கு கட்டுப்பட்ட பிள்ளைகளாய் வாழ உறுதியெடுப்போமா!