பதிவு செய்த நாள்
27
டிச
2011
12:12
ஆரியங்காவு: ஆரியங்காவில் தர்மசாஸ்தா- புஷ்கலாதேவி திருக்கல்யாண உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. கேரள மாநிலம் ஆரியங்காவில் தர்மசாஸ்தா- புஷ்கலாதேவிக்கு திருக்கல்யாண உற்சவம் சவுராஷ்டிர சமூகத்தினர் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. ஆரியங்காவு ராஜகொட்டாரத்தில் நேற்று முன்தினம் பாண்டியன் முடிப்பு என்ற நிச்சயதார்த்த சடங்கு நடந்தது. தொடர்ந்து நேற்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் நலுங்கு வைபவம் எனும் "ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தெய்வங்களுக்கு புதிய ஆடைகள் சாத்தப்பட்டன. மாலையில் கோவில் வளாகத்தினுள்ள ஐயனும் காளை வாகனத்திலும், அம்பாள் பூங்கோயில் வாகனத்தில் எழுந்தருளினர். அம்பாள் சப்பரம், சுவாமி சப்பரத்தை மூன்று முறை வலம் வந்தது. மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின் இரு சப்பரங்களும் ஒன்றாக வலம் வந்தன. திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவ சடங்குகள் நடந்தது. பகவானும், அம்பாளும் சர்வ அலங்கார மணக்கோலத்தில் காட்சியளித்தனர். தேவஸ்வம் சார்பில் த ங்கத்தாலி வர, திருமாங்கல்ய பூஜைக்கு பின் சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். அம்பாள் சார்பில் சவுராஷ்டிரா மக்களும், சுவாமி சார்பில் தேவஸ்வம் அதிகாரிகளும், கேரள, தமிழக பக்தர்களும் பங்கேற்றனர். தேவஸ்வம் போர்டு சார்பில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும், தேவஸ்வம் சார்பில் மூன்று நாட்கள் சம்பந்தி விருந்தும் வழங்கப்பட்டது. புஷ்கலா தேவி சவுராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சவுராஷ்டிரா சமூக முறைப்படி திருமண நிகழ்ச்சிகள் நடந்தது. சடங்குகளை புளியரை ஸ்ரீதரன் செய்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தாம்புலம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிர சங்க தலைவர் டி.கே.சுப்ரமணியன், செயலாளர் எஸ்.ஜே.ராஜன்,, மற்றும் நிர்வாகிகள் மோகன்,கண்ணன் உட்பட பலரும், பகவான் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.