ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2011 12:12
ஸ்ரீரங்கம்: இந்தியாவில் உள்ள 108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பெரிய கோவில் என்று ஆன்மீக அன்பர்களால் அமைக்கப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்டு ஏகாதசி விழா பகல்பத்து ராப்பத்து இயற்பா என 21 நாட்கள் நடக்கும். நேற்று வைகுண்ட ஏகாதசியின் பகல்பத்து விழா வெகுவிமர்சையாக துவங்கியது. ஸ்ரீரெங்கநாதர் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பகல்பத்து மண்டபம் என்று அழைக்கப்படும் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7.30 மணியில் இருந்து பகல் 1 மணி வரை பொது ஜன சேவையுடன் அரையர் சேவை நடந்தது. அலங்காரம், திருப்பாவாடை கோஷ்டி உபயக்காரர் மரியாதைக்கு பிறகு அர்சுண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானத்தை அடைந்தார். பகல்பத்து உற்சவத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பகல்பத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மோகினி அலங்காரம் வரும் ஜனவரி 4ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் ஸ்ரீரெங்கநாதர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கிறார். ஒவ்வொரு மனிதனும் காமத்தை அடக்க வேண்டும் என்ற உன்னத தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விழாவாக இது அமைகின்றது. ஸ்ரீரெங்கநாதர் மோகினி கோலத்தை காண ஸ்ரீரங்கத்தில் இருந்து மட்டுமின்றி லட்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். மறுநாள் 5ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ராப்பத்து விழாவின் 7ம் நாள் விழாவான திருக்கைத்தல ஸேவை வரும் 11ம் தேதியும், எட்டாம் நாள் விழாவான திருமங்கை மன்னின் வேடுபறி விழா 12ம் தேதியும் நடக்கிறது. 15ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறுகிறது.