பதிவு செய்த நாள்
27
டிச
2011
12:12
கடையநல்லூர் : சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயில் முதல் மண்டல பூஜை நெய் அபிஷேகம் இன்று (27ம் தேதி) காலை நடக்கிறது. மாமுனிவர் அகத்தியர் திருப்பாதங்கள் பதியம் பெற்றதால் புனிதம் பெற்ற பொதிகை மலை அருகில் சாம்பவர்வடகரையில் சுவாமி ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலை போன்று திருத்தலம் வடிவமைக்கப்பட்டு பிரசித்தி பெற்று விளங்கி வருகிறது. பக்தர்களுக்கான சுதந்திர வழிபாட்டு கோயிலாக சாம்பவர்வடகரை ஐயப்பன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை பொறுத்தவரை வழிபாட்டில் ஆண், பெண் பாகுபாடில்லை. ஒவ்வொரு பக்தரும் தாய், தந்தை, மனைவி, மக்களோடு 18 திருப்படிகள் ஏறி சென்று கருவறையில் அமர்ந்து அருள்புரியும் சுவாமி ஐயப்பனை வழிபடலாம். மாலையணிந்த குருசாமிகள் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். கருவறையை சுற்றி வெளிப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு, துர்க்கை, அன்னை காயத்ரி, காமாட்சி, ஜெயலட்சுமி, நாகராஜர், முத்துவிநாயகர், அருணாசலேஸ்வரர், ஸ்ரீராமர், சீதை லெட்சுமணர், சுப்பிரமணியன், வள்ளி, தெய்வானை, மாளிகைப்புரத்து அம்மன் ஆகிய சுவாமிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐம்பொன் திருமேனிகளை (சிலை) கொண்டதாக அருள்பாலித்து வருகின்றனர். இச்சன்னதியில் அமைந்துள்ள நவக்கிரக சன்னிதானங்களும் ஐம்பொன்னால் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு பெற்ற சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு விவகாரத்தை அடுத்து சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் சாம்பவர்வடகரை கோயிலுக்கு வருகை தந்து தங்களது விரதத்தை முடித்துக் கொண்டு செல்கின்றனர். இக்கோயில் முதல் மண்டல பூஜை இன்று (27ம் தேதி) காலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 6.30 மணிக்கு சாம்பவர்வடகரை டவுன் பஞ்., தலைவி செல்வி மூர்த்தி திருவிளக்கு ஏற்றுகிறார். தொடர்ந்து கஜபூஜை, கோபூஜை நடக்கிறது. 8 மணிக்கு உற்சவமூர்த்தி ஒப்படைப்பு விழா நடக்கிறது. உபயதாரர்களான சூரியமூர்த்தி, பேபி சூரியமூர்த்தி ஆகியோரிடம் இருந்து உற்சவ மூர்த்தியை ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன் கோயில் சார்பாக பெறுகிறார்.
நிகழ்ச்சிக்கு தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன், நெல்லை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஐயப்பன், தென்காசி தாசில்தார் ராசையா, சாத்தான்குளம் நெடுஞ்சாலைதுறை உதவி கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கின்றனர். தொடர்ந்து காலை 8.30 மணிக்கு உற்சவர் புறப்பாடு நடக்கிறது. 8.45 மணிக்கு சுவாமி ஐயப்பன் உற்சவர் திருவீதி உலா ஆரம்பமாகிறது. சென்னை கே.பி.சுனில் திருவீதி உலாவை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து மதியம் 11 மணிக்கு கோயிலில் நெய் அபிஷேகம் நடக்கிறது. கோயம்புத்தூர் ஜெயலட்சுமி முருகன் நெய் அபிஷேகத்தை துவக்கி வைக்கிறார். விழாவில் பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், சுரண்டை பழனிநாடார், சிவகாசி செல்வமணி, ஆறுமுகம், அகரக்கட்டு அந்தோணி வியாகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாலை 6 மணிக்கு ஐயப்பன் அடியாளர்கள் பஜனை நடக்கிறது. ஏற்பாடுகளை சாம்பவர்வடகரை சுவாமி ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் ஐயப்பன் அடியார்கள் செய்து வருகின்றனர்.