சிவன் என்றால் மங்கலம் தருபவர் என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் இவர் அதிபதி. உலகம் அழியும் காலத்தில், தான் மட்டும் சக்தி வடிவமாக லயித்திருப்பார். யோகிகளுக்கெல்லாம் தலைவராக தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஞானம் அருள்பவர் இவரே. அருவ நிலையில் (உருவமற்ற) இருக்கும் சிவபெருமான், அருவுருவம் (லிங்கம்), உருவமும் (பிட்சாடனர், சோமாஸ்கந்தர் முதலான சிலை வடிவங்கள்) தாங்கி அருள்புரிகிறார். திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்கிறார். அன்புநெறியைப் பின்பற்றிய வள்ளலார் சிவனிடம், அப்பா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும். ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு காட்டவேண்டும்! என்று வேண்டுகிறார்.