பதிவு செய்த நாள்
15
பிப்
2018
01:02
திருப்பூர்: முத்தணம்பளையம், ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில், மகா சிவராத்தி விழா, மயான பூஜை நேற்று நடந்தது. திருப்பூர் அருகே முத்தணம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற அங்காளம் மன் கோவில் உள்ளது. கோவிலில், மகா சிவராத்திரி விழா, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், மாலை, 8:00 மணிக்கு, மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலிருந்து கொண்டு வரப்பட்ட, அக்னி தீர்த்தத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவத்திற்கான, கங்கணம் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கு அம்மனை பெண் கேட்கும் படலம், மயான மூர்த்திக்கு, மொய் வழங்கி, செல்வம் சேர்த்தல், வெற்றிலை பாக்கு பிடித்தல் நிகழ்ச்சிகள், பக்தர்கள் முன்னிலையில் நிகழ்வாக நடந்தது. திருமண ஏற்பாடு நடக்கும் போது, அரக்கனான வல் லாள கண்டன், மக்களை துன்புறுத்துவதால், அவனை சம்ஹாரம் செய்து விட்டு, திருமணம் செய்து கொள்வதாக அம்மன் கூறி, கோவிலிருந்து வெளியில் எழுந்தருளினார்.
ஆடு, கோழி, பன்றி, அரக்கன் என பல வடிவங்களில் முகம் எடுத்து, போராடிய அரக்கனை, அம்மன் துவம்சம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், மயானத்தில் பதுங்கியிருந்த அரக்கனை, மயான ருத்ரி அவதாரம் எடுத்து, அழித்தார். மனித எலும்புகளை மாலையாக்கியும், கடித்தும் மயானத்தில் நடந்த, ஆக்ரோஷமான பூஜையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு, அம்மனை வழிபட்டனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோவிலின் சிறப்பு அம்சமான, அலகு தரிசனம் நடந்தது. அதிசயமான இந்த நிகழ்வை, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். இன்று காலை, 8:00க்கு, அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், இரவு, 8:00க்கு, பாகை விளையாடுதல், அம்மன் வரலாற்றை பாட்டுதல் எடுத்துரைத்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.