பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் நடந்த, அங்காளம்மன் கோவில் மயான சூறைத் திருவிழாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அங்காளம்மன் மயான சூறைத் திருவிழா நேற்று நடந்தது. கடந்த, 12ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
நேற்று காலை, 4:00 மணிக்கு முகவெட்டு எடுத்து, தென்பெண்ணை ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. காலை, 5:00 முதல், 9:00 மணி வரை அம்மன் சர்வ அலங்கார தரிசனம், பக்தர்கள் அலகு குத்தியும், உடல் முழுவதும் எலுமிச்சம் பழங்களை குத்திய படியும், சங்கிலி இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், 50க்கும் மேற்பட்டவர்கள் காளி வேடமணிந்து வந்தனர். மதியம், 1:35 மணிக்கு தேர், மயான சூறைக்கு புறப்பட்டது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊர்வலமாக, காவேரிப்பட்டணத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. தேர் அண்ணாசிலை அருகில் வந்த போது, பக்தர்கள் முதுகில் அலகு குத்திக் கொண்டு, 100 அடி தூரத்திற்கு அந்தரத்தில் தொங்கியபடி, அம்மனுக்கு மாலை அணிவித்தனர். மேலும் தீபாராதனை காட்டியும், குழந்தைகளை சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேர் மாலை, 5:00 மணிக்கு தென்பெண்ணை பாலத்தை கடந்து, ஆற்றங்கரையை சென்றடைந்தது. தென்பெண்ணை பாலத்தில், ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், அவ் வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, காவேரிப்பட்டணம் தாம்சன் பேட்டையில் உள்ள பூங்காவனத்தமன் கோவில் மயான சூறைத்திருவிழாவை முன்னிட்டு, மதியம், 1:15 மணிக்கு தேர் புறப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.