பதிவு செய்த நாள்
16
பிப்
2018
12:02
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கிழக்கு மாட வீதியில், நடைபாதை, தடுப்பு சுவருக்கு, துரு பிடிக்காத உருளை கம்பி அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த, 2014ல், பாரம்பரிய நகரமாக காஞ்சிபுரம் அறிவிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவிலை சுற்றிலும் சாலை வசதி, மின் விளக்கு, நவீன கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்காக, 19.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.முதற்கட்டமாக ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் சுற்றுப்பகுதிகளில் பணிகள் துவக்கப்பட்டு நடக்கின்றன. வரதராஜ பெருமாள் கோவில் சுற்றுப்பகுதிகளில் சாலை அமைத்து, அதில் மழைநீர், மின்சாரம், தொலைபேசி கேபிளுக்கு என, தனித்தனி கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கிழக்கு மாட வீதியின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டு, தடுப்பு சுவரில், எஸ்.எஸ்., ஸ்டீல் எனப்படும், துருபிடிக்காத உருளை கம்பிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.மேலும், கம்பிகளை தாங்கி பிடிக்கும் பில்லர்களுக்கு, கிரானைட் கற்கள் பதிக்கும் பணியும் நடக்கிறது.