பதிவு செய்த நாள்
16
பிப்
2018
12:02
செஞ்சி: ல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. காலை 10:40 மணிக்கு கோவிலில் இருந்து சிம்ம வாகனத்தில் விஸ்வரூப கோலத்தில் அங்காளம்மன் மயானப் புறப்பாடு நடந்தது.
அம்மனுக்கு முன்னதாக பூசாரிகள் பிரம்ம கபாலத்துடன் சாமி ஆடி வந்தனர். அங்காளம்மன் மயானம் வரும் வழி நெடுகிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாணயங்கள், காய்கனிகள், உணவு பொருட்கள், தானியங்களை வாரி இரைத்தனர்.11:00 மணிக்கு மயானத்தில் அங்காளம்மன் எழுந்தருளியதும், அங்கு பக்தர்கள் படையலிட்டு குவியலாக வைத்திருந்த உணவு பொருட்களை பூசாரிகளும், பொதுமக்களும் கொள்ளை விட்டனர். அப்போது பிரம்ம கபாலத்தை அங்காளம்மன் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். முக்கிய திருவிழாக்களான தீமிதி விழா, வரும் 18ம் தேதி மாலை 5:00 மணிக்கும், திருத்தேர் வடம் பிடித்தல் 20ம் தேதி மாலை 5:00 மணிக்கும் நடக்க உள்ளது.