பதிவு செய்த நாள்
16
பிப்
2018
12:02
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அங்காளம்மன் கோவில்களில், மயானக் கொள்ளை விழா நடந்தது. விழுப்புரம் பாகர்ஷா வீதியில் உள்ள ரேணுகா அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 78 வது ஆண்டு மயானகொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, விழுப்புரம் பாகர்ஷா வீதியில் அமைந்துள்ள ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 3:00 மணிக்கு பக்தருக்கு அம்மன் வேடமணியப்பட்டு சூரனை வதம் செய்யும் வழி அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மன், ஊர்வலமாக கே.கே., ரோட்டில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
திண்டிவனம்: திண்டிவனம் செஞ்சி சாலையிலுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் அம்மனுக்குசிறப்பு அபிஷேகம் செய்து, கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிவராத்திரி உற்சவமும் நடந்தது. தொடர்ந்து அமாவாசை தினமான நேற்றுகாலை 11:30 மணிக்கு, அங்காளபரமேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசூரசம்ஹாரத்துடன் ஆதிபராசக்தியாய் அமர்ந்து, பூங்கப்பரை காளி வேஷத்துடன் நகரத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சக்தி கரகம், அக்னிகரகம், ரண களிப்பு, குறத்தி, காளி, பாவாடைராயன் வேடம் தரித்து அம்மன் லிங்கபூஜை அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது. நேற்று பகல் 1:00 மணியளவில் அம்மன் புறப்பாடு நடந்தது. பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக பூங்கப்பாறையுடன் காளி, குறத்தி வேடம் தரித்து ஊர்வலமாக சென்றனர். அம்மன் சிங்க வாகனத்தில் ஊர்வலமாக வந்து மயானத்தில், கொள்ளை உற்சவம் நடந்தது.
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பாளையப்பட்டு அங்காளம்மன் கோவிலில், மயான கொள்ளை திருவிழா நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை பூங்கரக ஊர்வலமும், மதியம் 2 மணிக்கு, உளுந்தாண்டார்கோவில் நயினார் வகையறாவினரை, பாளையப்பட்டு அங்காளம்மன் கோவில் தர்மகர்த்தாக்கள் அரசக்காரர், அதிகாரி, பூசாரியுடன் சென்று கோவிலுக்கு அழைத்து வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் 3:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மருளாளிகள் அம்மனுடன் மயானம் புறப்பாடும், வல்லாளராஜன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை அக்னி கரகத்துடன் அம்மன் ஊர்வலமும, இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது.
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒதியத்துாரில் நடைபெற்ற 131 ஆம்ஆண்டு மயானக்கொள்ளை நிகழ்ச்சியில், விநாயகர், பாவாடைராயர், அங்காளம்மன் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் குளக்கரையில் இருந்து சக்திகரகம் வீதியுலா நடந்தது. அதனைத்தொடர்ந்நது அங்காளபரமேஸ்வரி அம்மன் மயானப்புறப்பாடு நிகழ்ச்சியும், வள்ளாலகண்டன் கோட்டையை அழிக்கும்நிகழ்ச்சியும் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அங்காளம்மனுக்கு மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும், இதனை தொடர்ந்து நேற்று மதியம் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், தென்பெண்ணையாற்றில் மயான கொள்ளை நிகழ்ச்சியும் நடந்தது. ராவத்தநல்லுாரில் நடந்த மயானகொள்ளை நிகழ்ச்சியில் தேரோட்டம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆறு கால சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் அம்மனை, மயான கொள்ளைக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். முன்னதாக கடைவீதியில் பக்தர்கள் அலகு குத்தி, பொக்லைன் வாகனத்தில் தொங்கியபடி பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்து, தீபாராதனை செய்தனர். பெரிய குளக்கரை பகுதியில் நடந்த மயான கொள்ளை உற்சவத்தில் பக்தர்கள் காய்கறிகள், நவதானியங்கள் மற்றும் சில்லரை காசுகளை வீசினர். இதில் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.