பதிவு செய்த நாள்
16
பிப்
2018
12:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், மயானக் கொள்ளை விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதற்காக, பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் சாலைஇ செங்கழுநீரோடை வீதி கிழக்கு ராஜ வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் ஆண்டு தோறும் சிவராத்திரி முடிந்த அமாவாசை அன்று, மயானக்கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில், பெரிய காஞ்சிபுரம் மார்க்கெட் மற்றும் கம்மாளத்தெரு, பெருமாள் நாயக்கர் தெருவினர் பங்கேற்பர்.
இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேஷம் அணிந்து ஊர்வலமாக மயானம் வரை சென்றனர்.கம்மாளத்தெருவில் இருந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் மலர் அலங்காரத்தில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த வினோதமான நிகழ்ச்சியை காண, காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால், செங்கழுநீரோடை வீதி மற்றும் பூக்கடை சத்திரம் பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்களின் ஊர்வலம், நேற்று மாலை, 4:00 மணிக்கு துவங்கியது. மூன்று பிரிவாக நடந்த இந்த ஊர்வலம், பழைய ரயில் நிலைய சுடுகாட்டை அடைந்தது. பிற, இரு ஊர்வலங்கள், தாயார் குளம் சுடுகாட்டை அடைந்தது.பக்தர்கள் அலகு குத்தியும், காளி வேஷமிட்டும், ஊர்வலமாக சென்றனர். விழாவிற்காக, கம்மாளத்தெரு கிழக்கு ராஜவீதி சாலை மற்றும் இந்திரா சாலை, செங்கழுநீரேடை வீதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. காஞ்சிபுரத்தில் நேற்று, மூன்று இடங்களில் சாலை மறியல் நடந்ததால், போலீசார் அந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், மயான கொள்ளை ஊர்வலத்தில் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
உத்திரமேரூர், பெருநகரில் மயான கொள்ளை விழா: உத்திரமேரூர் மற்றும் பெருநகர் பகுதிகளில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.உத்திரமேரூர், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மாலை, 5:00 மணிக்கு, மயான கொள்ளை நடந்தது. அங்காளபரமேஸ்வரி, காளி உருக்கொண்டு, பஜார் வீதி வழியாக ஆடிப்பாடி, தானியங்களை வாரி இறைத்தபடி மயானம் சென்றடைந்தார்.அங்கு, அசுர சக்திகளை விரட்டி அடிக்கும், மயானக் கொள்ளை நடந்தது. அதுபோல, பெருநகர், அருங்குன்றம் உள்ளிட்ட கிராமங்களிலும் இந்நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
கூவத்துாரில் விழா: கூவத்துாரில், இந்து சமய அறநிலைய துறையின், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு மயான கொள்ளை பிரம்மோற்சவம், 13ம் தேதி மாலை துவங்கியது.மறுநாள் காலை, கானாத்துார் அங்காளம்மன் மீனவ பகுதி கடற்கரையில் அம்மன் எழுந்தருளி, கடலாடி உற்சவம், இரவு, கூவத்துாரில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, மயான கொள்ளை உற்சவம், நேற்று கோலாகலமாக நடந்தது. உற்சவத்தை முன்னிட்டு, பகலில், அம்மனுக்கு மகா அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. மாலை 6:00 மணிக்கு, பாவாடைராயன், கோழி குடலை கவ்வி, முன்னே செல்ல, அம்மன் பின்தொடர்ந்து மயானம் சென்றார்.பக்தர்கள், அம்மனை வேண்டி, பழங்கள், காய்கறிகள் என, அங்கு குவிக்க, பக்தர்கள் அவற்றை கைப்பற்றி, மயான கொள்ளை உற்சவம், விமரிசையாக நடந்தது. இரவு அம்மன் வீதியுலா சென்றார். கூவத்துார் மற்றும் சுற்றுப்புற பக்தர்கள், அவரை தரிசித்து வழிபட்டனர்.