பதிவு செய்த நாள்
17
பிப்
2018
11:02
போடி: தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள் மூலம் திண்டுக்கல் அருகே ஓவா மலைப்பகுதியில் பழமையான அரிய வகை பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியது: தொல்பொருள் மற்றும் விழிப்புணர்வு மையத்தின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள கற்கால பொருட்களை கண்டு பிடிக்கும் பணியில் கல்லுாரி முதல்வர் மனோகரன் வழிகாட்டுதலில், தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் கனகராஜ், மாணவர்கள் ராம்குமார், சவுந்திரபாண்டி, பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகிறோம்.இரண்டு நாட்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தாலுகா சித்தரேவு ஊரின் வடமேற்கு 5 கி.மீ.,தொலைவில் உள்ள ஓவா மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
வெள்ளை நிற ஓவியங்கள் : ஓவா மலையில் பெருமாள் பொடவு என அழைக்கப்படும் பழங்கால குகைகளில் வெள்ளை நிற பாறை ஓவியத் தொகுப்பை கண்டறிந்துள்ளோம்.இதில் ஏழுக்கும் மேற்பட்ட மனித உருவங்களும், புலி, மான் போன்ற விலங்குகளின் உருவங்களும் வெள்ளை நிறத்தில் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. குகை வெளிப்புறத்தில் மனித உருவங்கள் கைகளை உயர்த்தி நடனமாடும் நிலையிலும், சில மனித உருவங்கள் கைகளை உயர்த்தி, குச்சி போன்ற ஒன்றை கையில் பிடித்து புலி, மானை பார்த்த நிலையில் உள்ளன. இது புலி, மானை மனிதர்கள் வேட்டையாடும் நிகழ்வு போல காட்சியளிக்கிறது. புலி தன் அருகில் உள்ள மானை பார்த்து தன் வாலை உயர்த்திய நிலையிலும், புலியின் உடல் முழுவதும் கோடுகள் வெள்ளை நிறத்திலும், மான் புலியை பார்ப்பது போல வரையப்பட்டுள்ளன. பெரிய மனித உருவம் ஒன்று தன் கைகளை தொங்கவிட்ட நிலையிலும், அருகில் கைகளை உயர்த்தி நடனமாடுவது போன்றும் காணப்படுகின்றன. பெரிய மனித உருவம் என்பது வேட்டையாடும் சமூகத்தின் அல்லது இனக்குழுவின் தலைவராக அல்லது கடவுளாக இருக்கலாம். மானையும் புலியையும் வேட்டையாடியதை கொண்டாடும் விதமாக கடவுள் முன் மகிழ்ச்சியில் நடனமாடியிருக்கலாம்.இங்கு காணப்படும் மனித உருவங்கள் தட்டையான அமைப்புடன் உள்ளது. சில மனித முகங்கள் பறவையின் முகத்தோற்றத்தை போல உள்ளது. சில உருவங்கள் குள்ள மனிதர்கள் போன்றும், அவர்களின் தலைப்பகுதி வட்டமாகவும் கைகளால் வரையப்பட்டுள்ளன.வாழ்விடம்: இங்கு காணப்படும் குகை ஓவியங்கள் மூலம் இப்பகுதி தொன்மையான மக்கள் வாழ்விடமாகவும் இருந்துள்ளது என அறிய முடிகிறது. இதே பகுதியில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வு செய்வதன் மூலம் வரலாற்று தொன்மையான தடயங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன, என்றார்.