பதிவு செய்த நாள்
19
பிப்
2018
01:02
ஆர்.கே.பேட்டை : திரவுபதியம்மன் உடனுறை தர்மராஜா கோவிலில், சகுனியின் சூது காரணமாக, நாடு இழந்த பாண்டவர்கள் மீண்டும் அரியணையை கைப்பற்றிய மகாபாரத திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 1ம் தேதி திரவுபதியின் சுயம்வரம் நடக்கிறது.பொதட்டூர்பேட்டை கிராமத்தில், நடப்பு ஆண்டின் அக்னி வசந்த உற்சவம் எனப்படும் தீமிதி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று முதல், வரும் மார்ச் 12ம் தேதி வரை, தினமும் பகல் 2:00 மணிக்கு, மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது. வரும் 28ம் தேதி முதல், இரவு 10:00 மணிக்கு, மகாபாரத தெருக்கூத்து நடக்கிறது. முதல் நாளில், அர்ச்சுனன் வில்வளைப்பு, அதை தொடர்ந்து ராஜசுய யாகம், பகடை துகில், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் துாது உள்ளிட்டவை இடம் பெறும்.
இதில், முக்கிய நிகழ்வகளான, அர்ச்சுனன் தபசு, மார்ச் 9ம் தேதி, பகல் 12:00 மணிக்கும், 10ம் தேதி பூப்பல்லக்கு பார்த்தசாரதி அலங்காரத்துடனும் நடக்கிறது. மார்ச் 11ம் தேதி, காலை 10:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்வும், அன்று, மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடக்கிறது. சகுனியின் தந்திரத்தால், சூதாட்டத்தில் நாட்டை இழந்து, வனவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள், குருஷேத்திர போரில் கவுர வர்களை எதிர்த்து வெற்றி கொண்டதால், 12ம் தேதி, தர்மராஜா பட்டாபிஷேகம் காண்கிறார். அன்றுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.