பதிவு செய்த நாள்
28
டிச
2011
10:12
மதுரை: தமிழகத்தில் கோவில் கோபுரங்களில் விரிசலை ஏற்படுத்தும் செடிகளை, ஊழியர்கள் பாதுகாப்பாக அகற்ற, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், "ஹைடிராலிக் ஏணி வாங்கப்படுகிறது.
பாதுகாப்பாக அகற்றுவது எப்படி? கோபுரத்தில் பறவைகள் எச்சமிடுவதால், விதை, செடிகளாக உருவாகின்றன. இவை, கோபுரங்களில் விரிசல் ஏற்படக் காரணமாகின்றன. தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கோபுரத்தில் செடிகள் மீண்டும் வளர்ந்துள்ளன. இதனால், சுதைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், உடனடியாக அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரத்தில், செடிகளை அகற்றிய தொல்லியல் துறை ஊழியர் பழனி, 48, தவறி விழுந்து இறந்தார். இதுபோன்று நடக்காமல் இருக்க, கடந்த இருபது ஆண்டுகளாக, மூலிகைகளை கொண்ட "டப்பலோ மருந்தை வைத்து கோபுர செடிகளை அழிக்கும் முருகானந்தம் கூறியதாவது:கோபுரங்களில் சாரம் இன்றி பணிகளை மேற்கொள்ளக் கூடாது. ஊஞ்சல் போன்று கட்டப்பட்ட கம்பில் அமர்ந்து செடிகளை அகற்ற வேண்டும். சட்டை, பேன்ட் அணிந்தால் சுதைகளில் ஆடை சிக்கி விபத்தை ஏற்படுத்தும். இதற்கு பதில், சட்டை இல்லாமல், "டிரவுசர் மட்டும் அணிந்து அகற்ற வேண்டும்.இவ்வாறு முருகானந்தம் கூறினார். அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், ""காளஹஸ்தி கோபுரம் இடிந்தவுடன், தமிழக கோவில் கோபுரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு "ஹைடிராலிக் ஏணி வாங்கி, பாதுகாப்பாக கோபுர செடிகளை களைய முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது, என்றனர்.