பதிவு செய்த நாள்
28
டிச
2011
10:12
ஐதராபாத்: ""வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி, சொர்க்க வாசல் தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இரண்டு நாட்களுக்கு மட்டும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில், 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார். ஐதராபாதில், நேற்று முன்தினம் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசிய பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு, சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ,ஏகாதசி, துவாதசி ஆகிய இரு நாட்களில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோன்று அன்றைய தினங்களில் சிறப்பு தரிசன கட்டணமாக, 300 ரூபாய் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கென, ஆன்-லைன் மூலம் ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள், அனைத்தும் விற்பனை ஆகிவிட்டன. இந்த டிக்கெட் பெற்றவர்கள் தரிசனம் எளிதாக பார்க்கும் வகையில் முன்னுரிமை வழங்கப்படும். திருப்பதியில் இருந்து அலிபிரி வழியாக திருமலைக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் உணவு வசதிக்காக, பாதயாத்திரை வழியில் காலி கோபுரம் அருகே இனி தினமும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடையே, ஏழை, பணக்காரர், வி.ஐ.பி., பக்தர்கள் என்ற வித்தியாசம் ஏற்படாதபடி செயல் திட்டம் வகுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2012 ஜன., 1 அன்று புத்தாண்டு தினத்தையொட்டியும், ஏகாதசி, துவாதசி தினங்களிலும், பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சில நேரங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியவில்லை, என்பதை ஒப்புக் கொள்கிறோம். இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.