பதிவு செய்த நாள்
26
பிப்
2018
12:02
வில்லியனூர்: திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி திருவிழா, வரும் 1ம் தேதி நடைபெறுகிறது.
வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சியில், கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் உற்சவ மூர்த்தி சங்கராபரணி ஆற்றில் தீர்த்த வாரி நடைபெறும். புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவர்.
இந்தாண்டு மாசி மக தீர்த்தவாரி பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 20ம் தேதி காலை 10:30 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கொடிஏற்ற ப்பட்டது.
அதனை தொடர்ந்து மூலவர் கங்கைவராக நதீஸ்வரர், காமாட்சி அம்மன் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜையும், இரவு 8 மணிக்கு கங்கைவராக நதீஸ்வரர், இந்திர விமானத்தில் வீதி உலாவும் நடந்தது.
வரும் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் தேர் திருவிழா நடைபெறுகிறது.சுகுமாறன் எம். எல்.ஏ., முன்னிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேர் வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார்.
மார்ச் 1-ம் தேதி காலை 6.30 மணிக்கு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. மேலும், சங்க ராபரணி ஆற்றங்கரை வடக்கு பகுதியில் உள்ள ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவிலிலும் மாசிமக உற்சவம் நடைபெறுகிறது.
இரு இடங்களிலும் நடைபெறும்தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆரியூர், வில்லியனூர், முத்திரையர் பாளையம், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் கோவில்களில் இருந்து சுவா மிகள் தீர்த்த வாரியில் கலந்து கொள்வர்.
திருக்காஞ்சி விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.