காரைக்குடி: அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. 400 ஆண்டுக்கு முன்பு கட்டிய பழமையான வரலாற்றை கொண்டது தென் திருப்பதி எனப்படும், அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில். திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். இந்த கோயில் கும்பாபிஷேக பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு அரியக்குடி ஸ்ரீ சீனிவாச பெருமாள் டிரஸ்ட் மற்றும் அரியக்குடி அலர்மேல் மங்கை தாயார் டிரஸ்ட் சார்பில் தொடங்கப்பட்டது. கோயில் ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரங்கள் மற்றுமுள்ள அனைத்து கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. துாண்கள் மற்றும் ஓவியங்கள் பழமை மாறாமல் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. மகா மண்டப மேற்புறத்தில் கமலம் உள்ளிட்ட அழகிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. புதிதாக அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வரும் மார்ச் 26-ம் தேதி காலை 6:08 மணி முதல் 7:08 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.