பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
கோத்தகிரி: கோத்தகிரி பில்லிக்கம்பை கிராமத்தில் உள்ள அரங்கநாதர் கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த, 28ம் தேதி, கோவில் நடை திறக்கப்பட்டு, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நாள்தோறும் ஐயனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 7:00 மணிமுதல், 9:00 மணிவரை ஐயனுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை, 10:30 மணிமுதல், 11:30 மணிவரை ஐயனை அலங்கரித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. பின்பு, முடி காணிக்கை செலுத்தி, ஆடல், பாடல் மற்றும் அரக்கோல் சுற்று விளையாட்டு நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, பஜனை இடம் பெற்றன.
பிற்பகல், 3:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பில்லிக்கம்பை, ஒன்னதலை மற்றும் டி. மணியட்டி உட்பட, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, காலை, 8:00 மணிமுதல், 10:00 மணிவரை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இதேபோல, கட்டபெட்டு, ஆருவ ஒசஹட்டி, பனஹட்டி மற்றும் கேர்பன் உள்ளிட்ட கிராமங்களிலும், அரங்கநாதர் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, இக்கிராமங்களில் நாடகம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.