பதிவு செய்த நாள்
03
மார்
2018
01:03
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் தலைமையகம், ஜிப்மர் கல்லுாரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில், ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி போலீஸ் தலைமையகத்தில் போலீசார் நடத்திய ஹோலி பண்டிகையில், கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, பிரெஞ்ச் துணை துாதர் கேத்தரின் ஸ்வார்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களின் நெற்றியில் கலர் பூசி, டி.ஜி.பி., சுனில்குமார் கவுதம் வரவேற்றார். கவர்னர், முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் மலர்களை துாவி, ஹோலி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி.,க்கள் ராஜிவ்ரஞ்சன், சந்திரன், சீனியர் எஸ்.பி.,க்கள் அபூர்வ குப்தா, மகேஷ்வர் பர்னவல் மற்றும் எம்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் நாராயணசாமி கூறுகையில், வடமாநிலங்களில் குளிர்காலம் முடிந்து, வசந்தகாலம் துவங்குவதை ஹோலி பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். புதுச்சேரியிலும் அதிக அளவில் வட மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிப்பதால், இங்கும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது. இந்துக்கள் மட்டுமின்றி, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் ஹோலி பண்டிகை கொண்டாடுகின்றனர். சகோதரத்துவம், மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் இந்நிகழ்ச்சி உள்ளது என்றார்.
ஜிப்மர்: ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பல்வேறு மாநிலத்தை் சேர்ந்த மாணவ மாணவியர், வண்ணப் பொடிகளை பூசியும், தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் அடித்தும் உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திலும், வெளி மாநில மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.