பதிவு செய்த நாள்
03
மார்
2018
01:03
புதுச்சேரி: திண்டிவனம் நல்லியக் கோடன் நகர் அலர்மேல் மங்கா சமேத சீனிவாச பெருமாளுக்கு, திருக்கல்யாண உற்சவம் புதுச்சேரியில் நடந்தது. திண்டிவனம், நல்லி கோடன் நகர், அலர்மேல் மங்கா சமேத சீனிவாச பெருமாள் சுவாமி, நேற்று முன்தினம் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் எழுந்தருளினார். அதையொட்டி, கடந்த 28ம் தேதி புதுச்சேரி வந்த சுவாமிக்கு, நுாறடி ரோடு சிருங்கேரி மடம் சாரதாம்பாள் திருக்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் வடமுகத்து வகுப்பு செட்டியார் திருமண மண்டபத்தில் சுவாமி எழுந்தருள செய்யப்பட்டது. சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு திருக்கல்யாண வைபவம் நடந்தது. முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பங்கேற்றனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:௦௦ மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (3ம் தேதி) காலை 10:30 மணிக்கு உலக நன்மை வேண்டி, மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. ஏற்பாடுகளை, சீனிவாச பெருமாள் மாசிமக தீர்த்தவாரி கமிட்டி கவுரவ தலைவர் பொன்னுரங்கம், தலைவர் ராமானுஜதாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.