வடமதுரை மாசித்திருவிழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2018 11:03
வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த பிப்.17–ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் சார்பில் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. பிப்.25ல் அம்மன் சாட்டுதலும், பிப்.27 முதல் மார்ச் 3 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மங்கம்மாள் கேணி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு 11:45 மணிக்கு துவங்கியது. காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 2 மணி நேரத்திற்கும் மேலாக பூக்குழியில் இறங்கினர். நேற்று காலை அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், கொலு,பொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது. இன்று மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.