பதிவு செய்த நாள்
02
ஜன
2012
11:01
புதுச்சேரி : அரவிந்தரை அவமதிக்கும் வகையில் புத்தகம் எழுதிய அமெரிக்காவை சேர்ந்த பீட்டர் ஹூக்ஸ் என்பவரை, ஆசிரமத்திலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி, ஆசிரமவாசிகள் நேற்று மவுன போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி ஆசிரமத்தில் வசிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டர் ஹூக்ஸ் என்பவர், "ஸ்ரீ அரவிந்தரின் பன்முக வாழ்க்கை என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் அரவிந்தரையும், அன்னையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும், எனவே, இந்த புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ததுடன், பீட்டர் ஹூக்சின் விசாவை ரத்து செய்து விட்டனர்.
அவரை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என கூறி, ஆசிரமவாசிகள் நேற்று அரவிந்தர் ஆசிரம நுழைவாயிலில் மவுன போராட்டம் நடத்தினர். பீட்டர் ஹூக்சை ஆதரிக்கும் அரவிந்தர் ஆசிரம அறக்கட்டளையினர் பதவி விலக வேண்டும். அவரை ஆசிரமத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். அவரிடம் உள்ள அரிய ஆவணங்கள், அரவிந்தரின் கையெழுத்து படிகளையும் மீட்க வேண்டும். பீட்டர் எழுதிய நூலுக்கு அளித்த பதிப்புரிமையை ஆசிரமம் திரும்பப் பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.