பதிவு செய்த நாள்
21
மார்
2018
01:03
உத்திரமேரூர் : காசி விஸ்வநாதர் கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று, ஆய்வு மேற்கொண்டனர். உத்திரமேரூர் ஒன்றியத்தில், அறநிலையத் துறைக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற பல கோவில்கள் உள்ளன. அவற்றில், மிகவும் பழுதடைந்த கோவில்களை சீர்செய்ய, அறநிலையத் துறை அதிகாரிகள், சில நாட்களாக ஆய்வு பணி மேற்கொண்டுள்ளனர். சாலவாக்கத்தில், பிரசன்ன வெங்கடேச பெருமாள், அழிசூரில் அருளாளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில கோவில்கள், ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டது. புனரமைப்பு பணி மேற்கொள்ள மதிப்பீடு தயாரித்து, மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி, நிதிக்காக காத்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக, கருவேப்பம்பூண்டியில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவிலை, அறநிலையத் துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். இக்கோவிலில், இடிந்து சிதைந்துள்ள மூலவர் கருவறை, விநாயகர் சன்னதி, ஆறுமுக சன்னதி, அம்பாள் சன்னதி போன்றவை சீரமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.