ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே கழிவு நீர், குப்பை குவிந்து கிடப்பதால், மீனவர்கள்அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் புனிதநீராடுகின்றனர். இத்தீர்த்தத்தில் லாட்ஜ், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலந்ததால், துர்நாற்றம் வீசி தீர்த்தம் மாசு அடைந்தது. இதனால் பக்தர்கள் தோல் அலர்ஜியில் பாதித்தனர். இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுத்தனர். இருப்பினும் அக்னி தீர்த்தம் அருகே 200 மீட்டர் துாரத்தில் கழிவு நீர் கலந்தும், குப்பை குவிந்து கிடப்பதால், துர்நாற்றம்வீசியது. சுகாதாரக்கேடு நிறைந்த இப்பகுதியில் நாட்டுபடகு மீனவர்கள், மீன்களை இறக்கி வலையை உலர வைப்பதால், மீனவருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் சுகாதாரம் பராமரிக்க, கடலோர பூங்கா மற்றும் அக்னி தீர்த்த கடற்கரையில்இருந்து சிமென்ட் சாலை அமைத்து, கோயில் தெற்கு ரதவீதி சாலையுடன் இணைத்தால் பக்தர்கள், மீனவர்கள் பயனடைவார்கள். இதற்கான திட்ட பணியை துவக்க மாவட்ட கலெக்டர் நடராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.