நபிகள் நாயகம் தமது தேவைகளுக்காக பிறரை எதிர்பார்க்க மாட்டார். செருப்பு, உடைகளை தாமே தைத்துக் கொள்வார். ஆடுகளிடம் அவரே பால் கறப்பார். வீட்டில் மட்டுமல்லாமல், தோழர்களுடன் சேர்ந்து வேலை செய்வார். மதீனாவில், அவர்கள் கட்டத் தொடங்கிய மஸ்ஜிதுக்காக நாயகமும் கல் சுமந்தார். அப்போது தோழர்கள், “ நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்?” என கேட்டனர். ஆனாலும் அவர் மற்றவர்களுடன் சேர்ந்து பணிகளை செய்ய விரும்பினார்.
ஒரு சமயம் தோழர்களுடன் பயணம் செய்த போது சமைப்பதற்காக விறகு சேகரிக்கும் பொறுப்பை ஏற்றார். அப்போது தோழர்கள், “இறைதூரே! இந்த வேலையை நாங்களே செய்து கொள்ள முடியும்” என்றனர். அதற்கு நாயகம் “அது உண்மை தான். ஆனால் நான் உங்களை விட உயர்வான ஸ்தானத்தில் என்னை வைத்து கொள்ள விரும்பவில்லை. தன் தோழர்களை விட, உயரிய நிலையில் வைத்திருப்பவனை இறைவன் நேசிக்க மாட்டான்,” என பதிலளித்தார். புரிந்து கொள்ளுங்கள். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவரவர் கடமைகளை அவர்களே செய்ய வேண்டும்.