பதிவு செய்த நாள்
30
மார்
2018
11:03
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகுவடிவேலா!
பங்குனி உத்திர பாட்டு
"படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான் முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மிநவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!
இந்த நாள் நல்ல நாள்
சிறப்பு மிக்க உத்திர நன்னாளில் நடந்தவை
* இமவானின் மகள் பார்வதியை சிவன் மணந்த நாள்
* சக்கரவர்த்தி திருமகன் ராமர் சீதையை மணந்தார்
* பரதன், லட்சுமணன், சத்ருகனன் திருமணம்
* இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பம்
* திருப்பரங்குன்றம் முருகன் - தெய்வானை திருமணம்
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்
* தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் அவதரித்த நாள்
* சிவனின் தவம் கலைக்க முயன்ற மன்மதனை எரித்தல்
* ரதியின் வேண்டுகோளால் மன்மதனை சிவன் உயிர்பித்தல்
* மார்க்கண்டேயனுக்காக சிவன் எமனை காலால் உதைத்தார்
* பாண்டவரில் ஒருவரான அர்ஜூனன் பிறந்தார்
பாவம் போக்கும் பரிதிநியமம்
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தலம் பருத்தியப்பர் கோயில். இத்தலத்தின் புராணப்பெயர் பரிதிநியமம். பரிதி என்றால் சூரியன். சூரியன் சிவபெருமானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றதால், சுவாமிக்கு பரிதியப்பர் பாஸ்கரேஸ்வரர் என்னும் பெயர்கள் உள்ளன. பருதியப்பர் என்ற சொல்லே பருத்தியப்பர் என மருவி விட்டது. பங்குனி 18, 19, 20 (இவ்வாண்டு ஏப்ரல் 1,2,3) ஆகிய நாட்களில் சூரியன் உதிக்கும் போது கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன. பரிதியப்பர், மங்கலநாயகி, முருகன், சூரியன் ஆகியோரை வழிபட
பிதுர் தோஷம் நீங்கும். இத்தல முருகனுக்கு பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கும்.பங்குனி உத்திர நாளான இன்று இந்த வழிபாட்டை படித்தால்முருகனருளால் வாழ்வு வளம் பெறும்
* குன்று தோறும் குடிகொண்ட முருகனே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபால னே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! பழநி தண்டாயுதபாணியே!தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சன்னிதியில் அடைக் கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.
* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனைமுகனின் தம்பியே! குழந்தை தெய்வ மே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர்வேலவனே! சிவசுப்பிரமணியனே! செந்தூர் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக்குமரனே! சுவாமிநாதனே! சரவணபவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி வெற்றி தருவாயாக.
* வேதம் போற்றும் வித்தகனே! குகனே! வள்ளி மணவாளனே! காங்கேயனே! கண்கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழ் நாயகனே! தமிழ்க்கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று, இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.
"48 ரகசியம்!
48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டால், அடுத்த பிறவி தெய்வப் பிறவியாக அமையும். ஜனன, மரண சக்கரத்தில் இருந்து விடுபட்டு முக்தி நிலையும் கிடைக் கும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகமான சூரியன், பங்குனி மாதத்தில் உக்கிரம் அடைவார். சந்திரன் பலம் பெற்று கன்னி ராசியிலும், சூரியன் மீன ராசியிலும் இருப்பர். இருவரும் ஒரு வரை ஒருவர் ஏழாம் பார்வையால் பார்த்துக் கொள்வர். எனவே, இந்நாளில் விரதமிருப் போருக்கு உடல், மனதால் செய்த பாவம் நீங்கும். உடல்நலம், நீண்ட ஆயுள், மனதைரியம்
கிடைக்கும்.
தெரிந்த ஊர் தெரியாத பெயர்
பழநிக்கு "பொதினி என்றும் பெயரும் உண்டு. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பேகன் இப்பகுதியை ஆட்சி செய்த போது, பழத்திற்காக முருகன் கோபித்துக் கொண்டு குன்றின் மேல் ஏறி நின்றார். அந்த குன்று தான் பொதினி. மேலும், ஆவி என்னும் வேளிர் தலைவனும் ஆட்சி செய்ததால் பழநி "ஆவினன்குடி என்ற பெயர் பெற்றது. இங்கு முருகன் சித்தர் (ஆண்டி) கோலத்தில் இருப்பதால் இதற்கு சித்தன் வாழ்வு என்ற பெயருண்டு.