ஆண்டிபட்டி;மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றை துார் வார நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மாதாந்திர கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் சுனை நீர் இக்கோயிலின் சிறப்பு.பல ஆண்டாக வற்றாத சுனை தற்போது வற்றிப் போனது. அருகே இருந்த தீர்த்த தொட்டியும் காய்ந்து விட்டது. இதனால் பக்தர்கள் குளிக்க சிரமப்படுகின்றனர். கோயில் வளாகத்தில் உள்ள கிணற்று நீர் தற்போது குளிக்க பயன்படுகிறது. சித்திரை முதல் தேதியில் துவங்கும் விழாவில் தேனி, வெளிமாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இவர்களுக்கு தேவையான தண்ணீர் தேவைக்கு கிணற்று நீரை மட்டும் பயன்படுத்தும் நிலை உள்ளது. அதில் கசடுகள் அதிகம்இருக்கிறது. கிணற்றில் உள்ள நீரை மோட்டார் மூலம் சில மணி நேரங்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. கிணற்றை துார்வாரினால் கூடுதலான நீர் சுரப்பு கிடைக்கும். விழாக்காலத்திற்கு முன் அதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.