பதிவு செய்த நாள்
05
ஜன
2012
11:01
சபரிமலை: சன்னிதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஒன்றரை மாதத்தில், 110 பாம்புகளை வனக் காவலர்கள் பிடித்து வனத்தில் விட்டனர். உற்சவக் காலத்தில் மட்டும், இருவரை பாம்பு தீண்டியது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல உற்சவம் நவ., 16ம் தேதி துவங்கி, டிச., 27ம் தேதி நிறைவுற்றது. தொடர்ந்து, டிச., 30ம் தேதி மகரஜோதி உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. இந்த ஒன்றரை மாத காலத்தில், சபரிமலை சன்னிதானம், கீழ்சாந்தி (அர்ச்சகர்) அலுவலகம், சபரி விருந்தினர் மாளிகை, மாளிகைப்புறத்தம்மன் கோவில், அன்னதான மண்டபம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருந்தன. அவற்றை வனக் காவலர்கள் பிடித்து, வனத்தில் கொண்டு சென்று விட்டு வருகின்றனர். இந்நிலையில், 2ம் தேதி சன்னிதானம் அருகே, தமிழகத்தைச் சேர்ந்த பக்தரொருவரை நல்ல பாம்பு கடித்தது. உடனடியாக, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதேபோல், சில வாரங்களுக்கு முன் சபரிமலையில் இருந்த தொழிலாளியை பாம்பு கடித்தது. அவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு சீசன் துவங்கிய பின், இதுவரை, இருவரை பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, வனத்துறையினர் நடத்திய பாம்பு வேட்டையில், நல்ல பாம்பு, கட்டு விரியன், சாரைப் பாம்பு உட்பட பல வகையிலான, 110 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனத்தினுள் விடப்பட்டன. காட்டுயானை, பாம்பு ஆகியவற்றின் நடமாட்டத்தால், பக்தர்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது.