பதிவு செய்த நாள்
13
ஏப்
2018
12:04
காஞ்சிபுரம்: ரங்கசாமி குளம், 24 லட்சம் ரூபாய் செலவில், மீண்டும்
சீரமைக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது பயன்பாட்டிற்கு வருமா என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம், ரங்கசாமி குளம், அஷ்டபுஜ பெருமாள் கோவில் பராமரிப்பில் இருக்கிறது. கடந்த, 2011ல், அண்ணா நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில், பல கோடி ரூபாயில், கோவில் குளம் மற்றும் பொது குளங்கள் சீரமைக்கப்பட்டன. அதில், ரங்கசாமி குளம், 22 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து, பொது மக்கள் நடைபயிற்சி செய்ய வழி, அலங்கார மின் விளக்குகள், புதிய தரைக்கற்கள் பதிக்கப் பட்டன. இந்த குளத்திற்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால், சமூக விரோதிகள், நடை பயிற்சி செய்யும் இடத்தை நாசப்படுத்தினர். இதனால், பொது மக்கள் பயன்பாடு குறைந்தது. சில மாதங்களே பயன்படுத்தப்பட்ட அந்த குளம் மூடப்பட்டது. அதே போல், மற்ற குளங்களும் பராமரிப்பு இன்றி சீரழிந்து கிடக்கிறது. கடந்த ஆண்டு சுற்றுலா வளர்ச்சி நிதியில், 24.30 லட்சம் ரூபாய் செலவில், ரங்கசாமி குளத்தை மீண்டும் சீரமைத்துள்ளனர். இனி மேலாவது குளத்திற்கு காவலாளியை நியமித்து, மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.