கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2018 03:04
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா நாளை (ஏப்.,17ல்) சாற்றுதல் செய்யப்பட்டு, மறுநாள் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையும், கிராம கமிட்டியாரும் செய்து வருகின்றனர். கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் கடந்த ஏப்., 13 ல் முகூர்த்தகால் ஊன்றப்பட்டது. நாளை (ஏப்,17) சாற்றுதல் செய்யப்படும். மறுநாள் காலை கம்பராயப் பெருமாள் கோயில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள உற்சவர் அம்மன் விக்ரகம் எடுத்துவரப்பட்டு நகர் வீதிகள் வழியே ஊர்வலமாக வந்து கோயிலில் வைக்கப்படும். மாலை கொடி ஏற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. 22 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும். விதவிதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடக்கும். சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக அக்னிசட்டி எடுத்தல் நடைபெறும்.ஆயிரக்கணக்கான அக்னி சட்டிகள் விடியவிடிய எடுக்கப்படும். பின்னர் பூக்குழி இறங்குதல், பொங்கல் வைத்தல், ஆயிரம் கண்பானை, உருண்டுகொடுத்தல், அலகு குத்தி வருதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்படும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், கிராம கமிட்டியினரும் செய்துள்ளனர்.