பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
12:04
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், குறுகிய இடத்தில் பக்தர்கள் முடி காணிக்கை மண்டபம் இயங்கி வருவதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர். முடி காணிக்கை இடத்தை விரிவுப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருத்தணி, முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தலைமுடி காணிக்கையாக செலுத்துகின்றனர். பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் முடி காணிக்கை செலுத்த இரும்பு தகடுகளால் மண்ட பம் அமைத்து, அங்கு பக்தர்களுக்கு மொட்டை அடிக்கப்படுகிறது. அதற்கு பக்கத்திலேயே, பக்தர்கள் குளிப்பதற்கும் இலவச குளியல் அறைகள் மற்றும் கழிப்பறைகள் கோவில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடம், குறுகிய இடம் என்பதால், மொட்டை அடிக்கும் பக்தர்கள், கடும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக, வார விடுமுறை ஞாயிறு மற்றும் கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்கள், கிருத்திகை, பிரம்மோற்சவம், ஆடிக்கிருத்திகை, படித்திருவிழா போன்ற நாட்களில், மலைக்கோவிலில் முடி காணிக்கை செலுத்துவதற்கு பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பக்தர்கள் வசதிக்காக முடி காணிக்கை மண்டபத்தை விரிவுப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.