பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
01:04
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், சித்திரை மாத வசந்த உற்சவ விழா, நாளை துவங்குகிறது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டு தோறும், சித்திரை மாதத்தில், வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல, நடப்பாண்டிற்கான விழா நாளை துவங்குகிறது. தொடர்ந்து, ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவில், உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகாமையில் உள்ள, வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனைகளும் நடைபெற்று, பின் மீண்டும் கோவிலைவந்தடைவார். விழாவின் இறுதி நாளன்று, சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
பூந்தோட்டத்தில் எழுந்தருளல்: ஆண்டுதோறும், அர்ச்சனைக்குத் தேவையான மலர்களையும், இலைகளையும் கொடுக்கும் விருட்சங்கள், சுவாமியை தங்களுக்கு அருகிலேயே பார்ப்பதற்காக, சுவாமி பூந்தோட்டத்திலேயே எழுந்தருளி, விருட்சங்களுக்கு காட்சி தருவதே, வசந்த உற்சவம் என, அழைக்கப்படுகிறது.