பதிவு செய்த நாள்
27
ஏப்
2018
12:04
ஆர்.கே.பேட்டை: சித்திரை பிரம்மோற்சவத்தில், நாகேஸ்வர சுவாமி, நேற்று, தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தை விட, தாமதமாக தேர் புறப்பாடு ஆனதால், பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, நாகபூண்டியில் அமைந்துள்ளது நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரர் கோவில், திருத்தணி முருகர் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில், நேற்று, தேர் திருவிழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், நாகவள்ளி, உடனுறை நாகேஸ்வர சுவாமி எழுந்தருளினார். காலை, 8:00 மணிக்கு, தேர் புறப்பாடு ஆவதாக அழைப்பிதழ் மற்றும் சுவரொட்டிகளில் குறிப்பிட்பட்டிருந்த நிலையில், காலை, 10:00 மணிக்கு பிறகே, தேர் புறப்பாடு ஆனாது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இன்று இரவு, திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. வரும், 4ம் தேதி கேடய உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.