பதிவு செய்த நாள்
10
ஜன
2012
11:01
திருவள்ளூர் : திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, 33 வகையான அபிஷேகங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபையாகும். ரத்தின சபை என்றழைக்கப்படும் இக்கோவிலில், ஆருத்ரா தரிசனம், நேற்று முன்தினம் நடந்தது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜர் அபிஷேகம் நடப்பதையே ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், ரத்தின சபாபதி பெருமான் ஸ்தல விருட்சத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து, கதம்பத்தூள், நெல்லிப்பொடி, வில்வப்பொடி, சாத்துக்குடி, வாழை, பஞ்சாமிர்தம், பால், தேன், சொர்ணாபிஷேகம், கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி என, மொத்தம் 33 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின், சர்வ அலங்காரம் செய்ய பெற்று, அதிகாலை 5 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஆலமர பிரகாரம் வலம் வந்து கோபுர தரிசனம் நடந்ததும், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 1 மணியளவில் அனுக்க தரிசனம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். ஆருத்ரா அபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தூரத்தில் அமர்ந்திருந்த பக்தர்களும் அபிஷேகத்தை காணும் வகையில், ஆங்காங்கே "டிவிக்கள் வைக்கப்பட்டிருந்தது.