பதிவு செய்த நாள்
30
ஏப்
2018
02:04
தஞ்சாவூர்: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில், சித்திரைப் பெருவிழா தேரோட்டம் நடந்தது. 108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்தாற்போல் சிறந்த தலமாகப் போற்றப்படுவதும், தமிழ் வேதமாக கருதப்படும் நாலாயிர திவ்யபிரபந்தம் விளைந்த தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, மிகப்பழமை வாய்ந்தது, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில்.
சுவாமி எழுந்தருளல்: இந்த கோவிலில் சித்திரைப் பெருவிழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி ஒரே ஓலைச்சப்பரத்தில் சாரங்கபாணிசுவாமியும், சக்கரபாணிசுவாமியும் வீதிவுலா வந்தனர். தொடர்ந்து, நேற்றுமுன்தினம், 28ம் தேதி வெண்ணெய்த்தாழி அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய விழாவான சித்திரை விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை, 4 மணிக்கு, பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பின் நான்கு வீதிகளிலும், ஏராளமான பக்தர்கள் சாரங்கா சாரங்கா என்று கோஷமிட்டவாறு, தேர் வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, பின்னர் இரவு, 10 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
சம்பிரதாய விழா; களையிழந்த தேரோட்ட விழா: கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம், வெகுசிறப்பாக நடக்கும் விழாக்களில் ஒன்று. ஆனால் இந்த ஆண்டு தேர் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், தேரோட்டம் ஒரு சம்பிரதாய விழாவாக நடந்தது. ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றவாறு பணிகள் நடைபெறுவதுண்டு. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இந்த கூட்டம் ஏதும் நடத்தப்படுவதில்லை. இதனால் தேரோட்டம் ஒரு சம்பிரதாய விழாவாக நடந்தது. தேரோட்டத்துக்கு சாரங்கபாணி கோவில் பணியாளர்களை தவிர, அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை.
அதிருப்தி: குறிப்பாக, கும்பகோணம் உதவி கமிஷனர் பங்கேற்காததால், கோவில் பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக தேருக்கான திரைச்சீலைகள், தொம்மைகள் மாற்றப்படாமல் இருந்ததால், தேரில் கட்டப்பட்ட இவையனைத்தும் வெளுத்து போய் வண்ணங்கள் நிறம் மாறியிருந்தது.
பரபரப்பு: இவற்றை மாற்றித்தர பல உபயதாரர்கள் இருந்தும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என, பக்தர்கள் குமுறினர். கும்பகோணம் பெரிய தெரு திருப்பத்தில் தேர் திரும்பும்போது, ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களில், தேர் குதிரை பொம்மைகள் மோதியதில், ஒரு குதிரை பொம்மை அறுந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.