பதிவு செய்த நாள்
30
ஏப்
2018
02:04
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்திரை பவுர்ணமி விழாவில், உலக நன்மைக்காக சிறப்பு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார், நேற்று துவக்கி வைத்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், சித்திரை பவுர்ணமி விழா, 28ல் துவங்கியது. உலக நாடுகளிடையே வளமான மற்றும் அமைதியான சூழல் உருவாக வேண்டும்; நம் நாட்டின் நீர் நிலைகள் நிரம்பி, விவசாயம் செழிப்படைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வேள்வி பூஜை துவங்கியது. ஆதிபராசக்தியை வணங்கி, கருவறையின் முன், பிரதான யாக குண்டத்தில், சிறப்பு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். பீடத்தில், 1,008 யாக குண்டங்களில், சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், தமிழக அமைச்சர் துரைக்கண்ணு, அரசு தேர்வாணையக் குழு தலைவர் அருள்மொழி, தென்னிந்திய ரயில்வே அதிகாரி செந்தில்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கான ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி இயக்க துணை தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட, ஆதிபராசக்தி சக்தி பீடம் மற்றும் வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.