பதிவு செய்த நாள்
03
மே
2018
10:05
சென்னை: காளிகாம்பாள் கோவிலில், புதிய கொடி மர கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
சென்னை, ராயபுரம், தம்பு செட்டி தெருவில், காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், மராட்டிய மன்னர், சத்ரபதி சிவாஜி வழிபட்டு சென்றுள்ளார். மகாகவி பாரதியார், யாதுமாகி நின்றாய் காளி என, காளிகாம்பாளை, தன் பாடலில் புகழ்ந்துள்ளார்.இக்கோவிலில், 1840ம் ஆண்டு, கோவில் கொடி மரம் அமைக்கப்பட்டது. 178 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கொடி மரம், பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து, இக்கோவிலின் புதிய கொடி மரம், பிப்., 4ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று, சிவாச்சார்யா அறக்கட்டளை நிர்வாக தலைவர், காளிதாஸ் சிவாச்சார்யா தலைமையில், புதிய கொடி மரத்திற்கான கும்பாபிஷேக விழா, கோலாகலமாக நடந்தது.கொடி மரத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, தங்க முலாம் பூசப்பட்ட செப்பு தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.