பதிவு செய்த நாள்
03
மே
2018
01:05
கோடையின் உச்சகட்டமாக கருதப்படும், கத்திரி வெயில் காலம், நாளை துவங்குகிறது. 24 நாட்களுக்கு வறுத்தெடுக்கும் வகையில், வெயிலின் உக்கிரம் இருக்கும்.பஞ்சாங்க கணிப்புகளின் படி, அக்னி நட்சத்திர காலத்தில் நிலவும் கத்திரி வெயில், கோடையின் உச்சகட்ட வெயில் காலமாக கருதப்படுகிறது. ஜோதிடம் மற்றும் பஞ்சாங்க கணிப்புகளின்படி, பரணி நட்சத்திரம் துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் வரையிலான, சூரியனின் பயண காலம், அக்னி நட்சத்திரம் என்றும், கத்திரி வெயில் என்றும் அழைக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு: இந்த ஆண்டுக்கான, கத்திரி வெயில் காலம், நாளை துவங்குகிறது. வழக்கம் போல், இந்த ஆண்டும் கத்திரி வெயில் உக்கிரம் காட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, பஞ்சாங்க கணிப்பாளர், சுந்தரராம வாஜ்பாய் கூறுகையில், நாளை துவங்கும் கத்திரி வெயில், 28ம் தேதி முடிகிறது. இதன்படி, 24 நாட்கள், வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும், என்றார். இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம், எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.இன்றைய வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது:தற்போது, கோடையின் இயல்பை ஒட்டியே வெயில் நிலவுகிறது. வடக்கு மற்றும் தெற்கு திசை காற்று சந்திக்கும் இடங்களில், கோடை மழை பெய்யும்.