கீழக்கரை: உத்தரகோசமங்கை கோவிந்தன் கோயிலில் அழகர் திருவிழாவையொட்டி அன்னதானம் நடந்தது. உத்தரகோசமங்கை கண்மாயின் மேல் கரையில் கோவிந்தன் கோயில் உள்ளது. மதுரையில் அழகர் திருவிழாவையொட்டி இங்கு அன்னதான விழா நடக்கும். 10 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களில் உள்ள 10 ஆயிரம் பேர் விழாவில் பங்கேற்றனர். இரண்டாயிரம் கிலோ அரிசியில் சாதம் வடித்து, மலை போல் குவித்து வைக்கப்பட்டது. சமைப்பதற்காக வீட்டிற்கு ஒரு பெண் வீதம் காலை 10 மணிக்கு காய்கறிகள் நறுக்க ஆரம்பிப்பார்கள்.
ஆண்கள் சமையல் வேலையை செய்வார்கள்.மாலையில் பூஜை செய்யப்பட்டு, பூசாரி தொட்டுகொடுக்கும் மண்வெட்டியைக் கொண்டு சாதம் எடுத்து பரிமாறப்படும். மாலை 6 மணி முதல் நள்ளிரவு 11:30 வரை பந்தி நடக்கும். கோயில் நிர்வாகிகள் கூறுகையில், மங்களநாதர் கோயில் தபசு திருநாள் முதல் 3 நாட்கள் நெல், மிளகாய், புளி, பருப்பு, அரிசி பெறுவோம். அதனைக் கொண்டு இந்த அன்னதான விழாவை நடத்துவோம். மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் விழா கொண்டாடப்படுகிறது என்றனர். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை யாதவ மக்கள் செய்திருந்தனர்.