பதிவு செய்த நாள்
08
மே
2018
01:05
ஆர்.கே.பேட்டை: சுந்தரவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், 13ம் தேதி துவங்குகிறது. 17ல், கருட சேவையும், 19ல், தேர் திருவிழாவும் நடைபெறும். ஆர்.கே.பேட்டை, பிராமணர் தெருவில் அமைந்துள்ளது, சுந்தவல்லி, விஜயவல்லி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவில். 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், 1987ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, மார்கழி உற்சவம், பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம் உட்பட, பல வைபவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 13ம் தேதி, அங்குரார்ப்பணத்துடன் பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. அதை தொடர்ந்து, 14ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை, 6;00 மணிக்கு, சஷே வாகனத்தில் பெருமாள் வீதிஉலா எழுந்தருளுகிறார். மறுநாள் செவ்வாய்க்கிழமை சிம்ம வாகனத்திலும், புதன்கிழமை சூரிய, சந்திர பிரபையிலும் பெருமாள் உலா வருகிறார். கருட சேவை, 17ம் தேதி நடக்கிறது. 18ம் தேதி அனுமந்த வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள், மறுநாள், தேரில் உலா வருகிறார். 20ம் தேதி, சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.