பதிவு செய்த நாள்
10
மே
2018
12:05
சங்ககிரி: சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவப் பெருமாள் சித்திரை திருவிழாவில், 1ம் நாளான நேற்று, சுவாமி மலைக்கு எழுந்தருளினார். சித்திரை திருவிழா, சங்ககிரி மலைக்கோட்டை சென்னகேசவப் பெருமாள் கோவிலில், கடந்த, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அங்கிருந்து, நகருக்குள் எழுந்தருளிய சுவாமி, ஒவ்வொரு நாளும், அன்னபட்சி வாகனம், சிங்கம், அனுமந்தன், கருடன், சேஷ, யானை ஆகிய வாகனங்களில் அருள்பாலித்தார். நேற்று முன்தினம், சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவ வைபவ விழா நடந்தது. நேற்று காலை, சென்ன கேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி சுவாமிகள், மலைக்கு எழுந்தருளினர். அதில், திரளான பக்தர்கள், கோவிந்தா கோஷமிட்டபடி சென்றனர். மலை உச்சிக்கு சென்ற சுவாமிக்கு, குறிஞ்சி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.
மழையில் நனைந்தபடி... : பனமரத்துப்பட்டி, ச.ஆ.பெரமனூர் மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, மா விளக்கு ஊர்வலம், பொங்கல் வைபவம் நடந்தது. அதையொட்டி, சமயபுரம் மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலை, கோவில் வளாகத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். வழிநெடுகில், ஏராளமானோர் வழிபட்டனர். கொட்டும் மழையில், பக்தர்கள் நனைந்தபடி, தேரை, கோவிலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இன்று அலகு குத்துதல், அக்னி கரகம் உள்ளிட்டவை நடக்கவுள்ளது.
தீ மிதித்த பக்தர்கள்: ஓமலூர், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், திரவுபதி அம்மன் ஆகிய கோவில்களில், சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. நேற்று காலை, மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்தார். இரவு, திரவுபதி அம்மன் கோவிலில், குண்டம் இறங்குதல் நடந்தது. முன்னதாக, கனமழை பெய்தபோதும், தொடர்ந்து குண்டம் எரியவிட்டு, பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காமலாபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, திரளான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். மூலவர் அம்மன், மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
* தலைவாசல், சிறுவாச்சூர், ஏரிக்கரையை ஒட்டியுள்ள, புது மாரியம்மன் கோவிலில், நேற்று காலை, பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபட்டனர். அதேபோல், தலைவாசல் ஏரி பின்புறமுள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பொங்கல் வைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள், முக்கிய வீதிகள் வழியாக, பால்குடம் சுமந்து, ஊர்வலமாக, கோவிலை அடைந்தனர்.
பொங்கல் வைபவம்: சேலம், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பல பக்தர்கள் அலகுகுத்தி, அக்னி கரகம் மற்றும் பூங்கரகம் எடுத்தனர்.