தாண்டிக்குடி: தாண்டிக்குடி பகுதியில் உள்ள கதவு மலை சிவன்கோயிலில், இப்போதும் இங்கு சித்தர்கள் வசிப்பதாக நம்பப்படுகிறது. உயர்ந்த மலைச்சிகர சரிவில், கடல் மட்டத்தில் இருந்து 1,670 மீட்டர் உயரத்தில் இந்தக் கதவுமலை சிவன் குடிகொண்டுள்ளார். இக்கோயிலில் பாறைகளின் இடையே உள்ள குகைகள் காண்போரை வியக்க வைக்கிறது. நூறு மீட்டர் தொலைவு கொண்டமலைச்சரிவின் விளிம்பில் ஒத்தையடி பாதையாககோயிலை அடையலாம். பாச்சலூர் பகுதி கிராம பகுதிகளில் இருந்து இக்கோயிலை காணும்போது, இருபுறமும் உள்ள பாறைகள் கதவு போன்ற அமைப்புடன் தெரிவதால், கதவுமலை எனப் பெயர் வந்துள்ளது. இதுகுறித்து அசன்கொடையை சேர்ந்த வைகுண்டம் என்பவர் கூறியதாவது: தமிழ் வருடப்பிறப்பு நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடை பயணமாக இங்கு வந்து தரிசனம் செய்வர். அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலையின் வலது பக்கம் ஓடும் ஆறு ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திற்கும், இடது பக்கம் ஓடும் ஆறு வரதமாநதி அணைக்கும், வடக்கு பக்கம் ஓடும் ஆறு பரப்பலாறு அணைக்கும் செல்கிறது. இப்படி இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் தாண்டிக்குடி வழியாக வந்து ரசிக்கின்றனர். இக்கோயிலின் சிறப்பு குறித்து மேலும் அறிய 97872 45105 ல் தொடர்பு கொள்ளலாம்.