பதிவு செய்த நாள்
14
மே
2018
10:05
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று நடந்த சித்திரை தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும், விருப்பன் திருநாள் எனப்படும், சித்திரை திருவிழா, 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு திருவிழா, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, அருள்பாலித்தார். நேற்று முன்தினம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து, வஸ்திரங்கள், மாலைகள் மற்றும் மங்கள பொருட்கள், கோவில் யானை ஆண்டாள் மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. நேற்று அதிகாலையில், நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு, ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, அதிகாலை, 5:15 மணிக்கு நம்பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை, 6:00 மணிக்கு, ரெங்கா ரெங்கா கோஷங் களுடன், பக்தர்கள் வடம் பிடிக்க, தேரோட்டம் துவங்கியது. நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர், 9:15 மணிக்கு நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங் கேற்றனர். இன்று சத்தாபரணம் நிகழ்ச்சியும், நாளை ஆளும் பூப்பல்லக்குடன் தேர் திருவிழா நிறைவடைகிறது.