பதிவு செய்த நாள்
15
மே
2018
12:05
மணலி: மணலி, சடையங்குப்பம் - பர்மா நகரில் நடந்த தீமிதி மஹோற்சவ விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மணலி, சடையங்குப்பம் - பர்மா நகரில், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய, 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, பீலிக்கான் அங்காள ஈஸ்வரி கோவில், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோவிலின் தீமிதி மஹோற்சவ விழா, 4ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 6ம் தேதி, பால்குட அபிஷேகம், மாங்கல்ய குத்துவிளக்கு பூஜை மற்றும் திருவீதி உலாக்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான, அக்னி குண்டத்தில் தீமிதித்தல் எனும், திருநடனம் புரிதல் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக, சடையங்குப்பம் ஏரி அருகேயுள்ள கங்கையம்மன் கோவிலில் இருந்து அலகு வேல், கூண்டு வேல், இளநீர் அலகு அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அணி வகுத்தனர். இரவு, பர்மா நகர், கோவிலின் முன் வளர்க்கப் பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை காண, சுற்றுவட்டாரத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.