பதிவு செய்த நாள்
14
ஜன
2012
11:01
நகரி: திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மற்றும் திருமலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும், இலவச அன்னதானத்திற்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரத்தை பரிசீலிக்க, எட்டு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூலப் பொருட்களை பரிசோதிக்க, நவீன கருவிகளும் வாங்கப்பட உள்ளன. திருமலையில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுக்காக, ஒவ்வொரு ஆண்டும், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வாங்கப்படுகின்றன. இதன் தரத்தை பரிசீலனை செய்ய, 1985ம் ஆண்டு திருமலையில் ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், பக்தர்கள் அதிக அளவில் திருமலைக்கு வருவதையொட்டி உணவு தயாரிப்பதும் அதிகரித்துள்ளது. ஆனால், உணவு பொருட்களின் தரத்தை பரிசோதிக்க நிறுவப்பட்ட ஆய்வு மையத்தின் தரம், அதற்கேற்ற வகையில் உயர்த்தப்படவில்லை. திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும், இப்பிரிவில் பணிபுரிவதற்கு ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது. விரைவில் அதிகம் பேர் ஓய்வுபெற உள்ளதாகவும் தெரிகிறது. மேலும், இலவச உணவு தயாரிக்க உபயோகிக்கும், அரிசியின் தரம் குறைவாக உள்ளதாக சமீபத்தில் பக்தர்களிடமிருந்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன. திருமலை கோவிலின் உபயோகம் மற்றும் நித்ய அன்னதான உபயோகத்திற்கும் சேர்த்து தினமும், 10 ஆயிரம் கிலோ அரிசி உபயோகப்படுத்தப்படுகிறது. லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு தினமும், 16 டன் நெய் பயன்படுகிறது. உலர்ந்த திராட்சை, முந்திரி பருப்பு, சர்க்கரை, கடலை மாவு போன்ற பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றை துல்லியமாக பரிசோதனை செய்வதற்கு, நவீன கருவிகள் இல்லை. இவற்றின் தரத்தை மதிப்பிட நிபுணர் பற்றாக்குறையும் உள்ளதால், தேவஸ்தானத்திற்கு மூலப் பொருட்களை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை அறிந்து கொண்டு, தரம் குறைந்த பொருட்களை தேவஸ்தான நிர்வாகத்திற்கு சப்ளை செய்து வருவதாகவும் தெரிகிறது. ஒப்பந்ததாரர்களின் போக்கை அறிந்துகொண்ட தேவஸ்தான நிர்வாகம், இதுகுறித்து தனி கவனம் செலுத்தி, உணவுப் பொருட்களின் தரத்தை பரிசீலிக்க, உடனடியாக 8 பேர் கொண்ட நிபுணர் கமிட்டியை நியமனம் செய்துள்ளது. இவர்களை பரிசோதனை பிரிவில் நிரந்தரமாக பணி அமர்த்துவதற்கு அனுமதி கோரி, மாநில அரசுக்கும் தேவஸ்தானம் தீர்மானம் அனுப்பியுள்ளது. மேலும், லட்டு பிரசாதம், இலவச உணவு தயாரிக்க உபயோகிக்கும் மூலப்பொருட்களின் தரத்தை பரிசீலனை செய்வதற்கு, 50 லட்ச ரூபாய் செலவில், நவீன கருவிகள் சிலவற்றை வாங்கவும் தேவஸ்தான நிர்வாகம் தீர்மானித்துள்ளது.