பதிவு செய்த நாள்
18
மே
2018
11:05
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளம் கோடை வெயில் தாக்கத்தால், நீர்மட்டம் குறைந்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலமாக வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மேலும், ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சங்கு தீர்த்த குளம் முதன்மை தீர்த்தமாகவும், மாவட்டத்தில் அதிக பரப்புகொண்ட பெரிய குளமாகவும், 12 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதில்,12 ஆண்டுக்கு ஒரு முறை சங்கு பிறப்பதால், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகின்றனர். இந்நிலையில், தற்போது பருவ மழை குறைவு மற்றும் கோடை வெயில் தாக்கம் போன்ற காரணங்களால், நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பல சிறப்பு வாய்ந்த இக்குளத்திற்கு, வேதகிரீஸ்வரர் மலையிலிருந்து நீர் வருவதற்கான, கழுகுக்குன்று வடிகால்வாய், கிரிவலப்பாதை வடிகால்வாய், லட்சுமி தீர்த்த வடிகால்வாய், காக்கைக்குன்று வடிகால்வாய் என நான்கு நீர்வரத்து கால்வாய்கள் உள்ளன.மேற்கண்ட கால்வாய்களில், கழிவுநீர் கலப்பது, கட்டடங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்வது போன்ற பல வகையில் துார்க்கப்பட்டு வருகிறது. இதனால், குளத்திற்கு வரும் நீர்வரத்து தடுக்கப்படுகிறதுஎனவே, தற்போது இருக்கும் நேரத்தை பயன்படுத்தி, நீர்வரத்து கால்வாய் மற்றும் குளத்தை சீரமைத்தால், எதிர்வரும் காலத்திற்கு நீர் ஆதாரத்தை பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.