பதிவு செய்த நாள்
16
ஜன
2012
10:01
பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதமாக காலங்காலமாக கொண்டாடுகிறது. அதற்கு மதுரை திருவாதவூர் - மேலூர் ரோட்டில் உள்ள பதினெட்டாங்குடி கிராமமும் விதிவிலக்கல்ல.மாட்டுப் பொங்கல் அன்று, இந்த ஊர் கோயில் காளையை தேடிப் பிடித்து, குளிக்க வைத்து, அழகுபடுத்தி, அருகில் உள்ள பட்டத்து அரசியம்மன் கோயிலுக்கு மக்கள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு மணியோசையை மிஞ்சும் வகையில், குலவைச் சத்தம் ஒலிக்க, அதிகாலை முதலே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைக்கின்றனர். ""சிலர் நேர்த்திக்கடனுக்காக நாட்டுக்கோழிகளை "காவு கொடுப்பதும் உண்டு,என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த பூஜாரி சித்திரை. "பொங்கல் சாப்பிடும் நேரத்தில் கறிவிருந்தா என்ற நாம் ஆச்சர்யப்பட, ""இது அந்த காலத்திலிருந்து பின்பற்றப்படுகிறது என்ற சித்திரை, தொடர்ந்து கூறியதாவது :மாட்டுப் பொங்கலன்று, ஊர் மக்கள் சேர்ந்து கோயில் காளையை பட்டத்து அரசி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்வோம். அங்கு காளைக்கு மரியாதை செய்வோம். தனி நபர்கள் அழைத்து வரும் காளைகளுக்கும் ஊர் சார்பில் மரியாதை செய்வோம். பிறகு கோயில் காளையை அருகில் உள்ள மைதானத்தில் விட்டு "மஞ்சுவிரட்டு விளையாடுவோம். ஊர் மக்களில் சிலர், இத்தினத்தன்று கோழி மட்டும் "காவு கொடுப்பார்கள். அதை சமைத்து, வீடுகளில், உறவினர்களுக்கும், ஊர் மக்களுக்கும் கறிவிருந்து அளிப்பார்கள். வீட்டுக்கு வீடு கறிவிருந்து நடக்கும். எப்படி இப்பழக்கம் வந்தது என்பது தெரியவில்லை. ஆனாலும் பழமையை மறக்காமல், இன்றும் இதை பாரம்பரியமாக கருதி செய்கிறார்கள், என்றார். இக்கிராமத்தில் மட்டுமல்ல, பெரும்பாலான கிராமங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது என்றால் ஆச்சர்யம்தானே.