பதிவு செய்த நாள்
16
ஜன
2012
10:01
இன்று மாட்டுப்பொங்கல் நாளில் மாடுகளை குளிப்பாட்டி, அழகுபடுத்தி, பொங்கல் கொடுத்து அவற்றை வழிபட்டு, கவுரவிக்க உள்ளோம். இந்த வழக்கம் தொன்று தொட்டு தொடரும் நமது பாரம்பரியம். இந்த கொண்டாட்டம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் மாட்டுப்பொங்கலில், மாடுகளை சந்தோஷப்படுத்தும் ஒரு நடைமுறை உள்ளது. இதற்காகவே வயல் மற்றும் கரடுகளில் தானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. விழாவிற்கு முன் தானியங்கள் விளைந்து விட்டால் அவற்றை மட்டும் எடுத்து விட்டு, பயிரை அப்படியே விட்டு விடுவார்கள். மாட்டுப் பொங்கல் அன்று காலையில் அனைத்து சம்பிரதாய சடங்குகளை முடித்துவிட்டு, பகல் 3 மணிக்கு மாடுகளின் கழுத்தில் உள்ள கட்டுகளை அவிழ்த்து விடுவர். அவை இந்த பயிர்களை உற்சாகமாக சாப்பிட்டு, நிலத்தை கிளறி, அவற்றின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்.இந்தநாளில் மட்டும் இந்த பயிர்கள் வளர்க்கப்படும் இடத்தில், வேறு மாடுகள் வந்தாலும் அவற்றை உரிமையாளர்கள் விரட்டுவதும் இல்லை. தற்போது தானிய விளைச்சல் பல பகுதிகளில் நடைபெறாததால், இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக சீமைப்புற்கள் வளர்க்கப்படுகின்றன. வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கணேசன் கூறுகையில், ""மாட்டுப்பொங்கல் அன்று மஞ்சு விரட்டுமாடு, உழவுமாடு, விருதாமாடு, பசுமாடு, ஆடுகளை ஒரே நேரத்தில் கட்டுகளை அவிழ்த்து பயிர்களில் மேயவிடுவோம். அந்த நேரத்தில் இவை ஒன்றுக்கு ஒன்று சண்டையிடுவது இல்லை. அதிக மழை அல்லது வறட்சி என ஏதாவது ஒரு வகையில் விவசாயம் பாதிக்கப்பட்டுவிடுகிறது. அதனால் இந்த நிகழ்ச்சிக்காக இந்த ஆண்டு புல் வளர்த்துள்ளோம். மாட்டுப் பொங்கல் அன்று மட்டும் இங்கு அவற்றை மேயவிட்டு சந்தோஷப்படுத்துவோம், என்றார்.