பதிவு செய்த நாள்
23
மே
2018
01:05
தஞ்சாவூர்: சுவாமிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, ஏழு வீடுகளை வருவாய்துறை அலுவலர்கள் இடித்து அகற்றினர். தஞ்சாவூர், கும்பகோணம் அருகே ஏரகரம் கிராமத்தில் கந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின், இணை கோவிலாக நிர்வகிக்கப்படுகிறது. கந்தநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, ஏழு பேர் வீடு கட்டியிருந்தனர். இருவர் வீட்டு மனைகளாக காலி இடத்தை பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு இடங்களை காலி செய்யும்படி பயனாளிகளிடம் தெரிவித்திருந்தனர்.ஆனால், ஆக்கிரமிப்பு இடத்தில் குடியிருந்தவர்கள் காலி செய்யவில்லை. இதையடுத்து, அறநிலையத்துறையின் வருவாய் நீதிமன்றத்தில் சுவாமிமலை கோவில் சார்பில், 2013ல் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆக்கிரமிப்புகளை காலி செய்யும்படி வருவாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், நேற்று வருவாய்துறை, போலீசார் உதவியுடன் சுவாமிமலை கோவில் நிர்வாக அலுவலர்கள், அறநிலைய துறை ஊழியர்கள் பொக்லைன் மூலம், 7 வீடுகள் மற்றும் இரண்டு காலி மனைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் இடத்தை மீட்டனர்.